மாற்றுத்திறனாளி நிலக்கோட்டை ஆட்டைய போட்ட திமுக எம்.எல்.ஏ?…. 9.7 ஏக்கர் நில மோசடி…. கடையநல்லூர் திமுக எம்.எல்.ஏ மீது FIR பாய்ந்தது…. 6 பேர் மீது IPC 420 வழக்கு….!

By Nanthini on ஐப்பசி 14, 2026

Spread the love

கடையநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் உட்பட 6 பேர் மீது, மாற்றுத்திறனாளி ஒருவரின் 9.7 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்து மோசடி செய்ததாக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வடக்குப்பனவடலி கிராமத்தைச் சேர்ந்த முருகையா என்ற மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டம் அக்காமலை அஞ்சல் பகுதியைச் சேர்ந்த முருகையா தனது புகாரில், தமக்கு பூர்வீகமாகச் சொந்தமான 9.7 ஏக்கர் நிலம் தனது தந்தை மற்றும் சித்தப்பா பெயரில் கூட்டுப் பட்டாவில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரனும் அவரது சகோதரரும், தங்களது தந்தையின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் மற்றும் குடும்பத்தினரின் அனுமதியின்றி, போலியான ஆவணங்கள் மூலம் மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த நிலத்தைப் பதிவு செய்து விற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

   

2019ஆம் ஆண்டு ஆவணங்களின்படி, எம்எல்ஏ ராஜேந்திரனின் மகன் சித்தார்த்தன் பெயரில் இந்த நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்பொழுது அப்பகுதியில் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டு மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட முருகையா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ ராஜேந்திரன் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில்கூட தமக்குச் சொந்தமான இந்தச் சொத்தின் விவரங்களைச் சேர்த்துக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்த முறைகேடு தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டபோது, தவறு நடந்துவிட்டதாகவும், பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளதாகவும் கூறி அதிகாரிகள் நழுவிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனக்கான உரிய இழப்பீட்டுத் தொகையையும் நியாயத்தையும் பெற்றுத் தருமாறு முருகையா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தன்னை முழுமையாக திமுகவில் இணைத்துக் கொண்ட எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அவருடன் கூட்டு சேர்ந்துள்ள அரசு அதிகாரிகள் மீதான இந்த நில அபகரிப்புப் புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பதிவு மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இந்த விவகாரம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.