தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அந்த மாவட்ட உடன்பிறப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமியுடன் மறைமுக ‘டீலிங்’ வைத்துக்கொண்டு, அவரது மனைவி கிருத்திகாவை முதுகளத்தூர் தொகுதியில் நிற்க வைத்ததே இவர்தான் என்றும், தற்போதும் அமைச்சர் ராஜகண்ணப்பனைத் தோற்கடிக்க அதே போன்றதொரு சதித்திட்டத்தை அவர் தீட்டி வருவதாகவும் திமுகவினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த மலேசியா பாண்டியனை ராஜகண்ணப்பனுக்கு எதிராக நிறுத்தவும், கிருத்திகாவை இந்த முறை திருவாடனை தொகுதியில் போட்டியிடச் சொல்லியும் காதர்பாட்சா அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவாடனையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்பதால், அதிமுக வேட்பாளர் எளிதாக வெற்றி பெறத் தான் உதவுவதாக முனியசாமியிடம் அவர் உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போட்டியிடக் கூடாது என்பதற்காக, ராமநாதபுரம் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கும்படி அதிமுக தரப்பில் காய்நகர்த்தி வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராகவும் பல உள்ளடி வேலைகளைக் காதர்பாட்சா பார்த்து வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொதிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் தானே ‘ராஜா’வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, சுந்தர் ராஜன் போன்ற மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டுவதுடன், திமுகவின் அதிகாரப்பூர்வ முழக்கத்தையே மாற்றி ‘முத்துராமலிங்கம் தொடரட்டும்’ எனத் தனது ஆதரவாளர்களை வைத்து முழக்கமிடச் செய்தது அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சொந்தக் கட்சி நிர்வாகிகளையே காலி செய்யும் இவரது ‘சகுனி’ வேலைகளால் உண்மையான திமுக விசுவாசிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீது ஏற்கனவே 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு மற்றும் 900 கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைமை நடத்திய சர்வே ரிப்போர்ட்டிலும் இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இவ்வளவு புகார்களுக்கு உள்ளான காதர்பாட்சாவிற்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பு குறைவு என்றே அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் நிலவும் இந்த அதிரடி திருப்பங்கள் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…