மதுரையில் செல்லூர் ராஜு வைத்த ஆப்பு… மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது… எடப்பாடி அறிவித்த பட்டியலில் ட்விஸ்ட்…!

By Nanthini on பங்குனி 27, 2026

Spread the love

மதுரை அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியானது முதல் சலசலப்புகள் ஓயவில்லை. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், எஞ்சிய மதுரை மத்திய மற்றும் மதுரை தெற்கு ஆகிய இரு தொகுதிகளும் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்களான பி.எம். மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோருக்கு சீட் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் முன்னெடுப்பால் அதிமுகவில் இணைந்த பி.எம். மன்னன், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து மதுரை மத்திய தொகுதியில் பலமான வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு சீட் வழங்கப்பப்படும் என்ற உறுதியளிக்கப்பட்ட பின்னணியில், தற்போது அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிக்குச் சென்றிருப்பது மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

   

மதுரை மாவட்டத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மீண்டும் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பழைய முகங்களுக்கே தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த புதிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, மு.க. அழகிரியின் விசுவாசிகளாக அறியப்பட்ட மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது, எதிர்வரும் தேர்தலில் அதிமுகவின் களப்பணியைப் பாதிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

செல்லூர் ராஜுவின் தீவிர முயற்சியால் கட்சிக்குள் வந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டதாகக் கருதப்படுவதால், அவர் மீதே இந்த அதிருப்தி கணைகள் திரும்பியுள்ளன. தென் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாநகரில், செல்வாக்கு மிக்க இத்தலைவர்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவார்களா அல்லது இந்த அதிருப்தி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.