பதவி காலி… லண்டனில் இருந்து பறந்த உத்தரவு…. தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்கள்.. ஜூலை 20-க்கு பின் திமுகவில் நடக்கப்போகும் ‘மெகா’ ஆபரேஷன்….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரிடியாகவும் பலத்த அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளன. தங்களுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றும், மீண்டும் எளிதாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிடலாம் என்றும் கணக்குப்போட்ட திமுகவிற்கு இத்தேர்தல் தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்ததும், எளிதில் வெல்லலாம் என நினைத்த பல முக்கியத் தொகுதிகளில் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததும் திமுகவினரை நிலைகுலையச் செய்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் அதிரடி நடவடிக்கைகளில் திமுக தலைமை தற்போது களம் இறங்கியுள்ளது.

திமுகவின் இந்த எதிர்பாராத தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 36 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’ ஒன்றை அமைத்திருந்தார். இக்குழுவினர் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று தீவிர ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஒன்றியச் செயலாளர்கள் வரை பலர் தேர்தலின் போது கட்சிக்கு எதிராக ‘உள்ளடி’ வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆவண ஆதாரங்கள் இக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்சியின் தலைவரது தோல்விக்கான பின்னணி குறித்தும், சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கையில் பரபரப்புக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

   

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினின் மகனும், தனது பேரனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாட்டுப் பட்டப்படிப்பை முடித்ததையொட்டி, அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி லண்டன் சென்றிருந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக லண்டனில் தங்கியிருந்தபோதிலும், அவர் கட்சியின் விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். உண்மை கண்டறியும் குழு அளித்த விரிவான அறிக்கையை நாள்தோறும் லண்டனில் இருந்தபடியே தீவிரமாக ஆய்வு செய்த ஸ்டாலின், அறிவாலயத் தொடர்பாளர்களைத் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

   

இந்தச் சூழலில், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார். சென்னை வந்தடைந்தவுடன், உண்மை கண்டறியும் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த மாநில, மாவட்ட மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிரடிப் பட்டியல் ஏற்கனவே ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தயாராகி வருவதாகவும், வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் முதல் ஒன்றியக் கழக நிர்வாகிகள் வரை பலரது பதவிகள் பறிக்கப்பட்டு, அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.