மாநிலங்களவையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், பாஜக தனிப்பெரும்பான்மையை நெருங்கி வருவது இந்திய அரசியலில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் பார் ஆகிய 3 எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 117 ஆக உயர வாய்ப்புள்ளது. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு (166 உறுப்பினர்கள்) தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு (NDA) இன்னும் 14 பேரின் ஆதரவு மட்டுமே கூடுதலாகத் தேவைப்படுகிறது.
பாஜகவின் இந்த அசுர பல வளர்ச்சிக்கு மத்தியில், வரும் ஜூலை 20 முதல் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு போன்ற முக்கிய மசோதாக்களுக்கு திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு தொகுதி மறுவரையறை மசோதாவை மக்களவையில் வீழ்த்திய திமுக (8 எம்.பிக்கள்), தற்பொழுது தமிழகத்தில் ஆட்சியை இழந்ததோடு காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகியுள்ள நிலையில், ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் (5 எம்.பிக்கள்), ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (4 எம்.பிக்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெறவும் மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
