தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. நீண்ட காலக் கூட்டணியாக இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தோல்வியைச் சந்தித்த திமுக, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து திமுக பரிசீலித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு வலுவான பெரும்பான்மையை உறுதி செய்ய, திமுக வசம் இருக்கும் 22 மக்களவை எம்பிக்கள் மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பாஜகவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸுடனான உறவு முறிந்த நிலையில், லோக்சபாவில் தங்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கக் கோரி சபாநாயகருக்குத் திமுக கடிதம் எழுதியுள்ளது. இந்த நடவடிக்கை, அவர்கள் தற்போதைய கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி மாற்றத்தை நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
