மாநில அரசியலில் நிலவும் புதிய அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கம் காட்டி வருவதாகவும், விரைவில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது திமுகவிற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் உடனான கூட்டணி முறிந்த நிலையில், தேசிய அளவிலான வலுவான கட்சி ஒன்றின் ஆதரவு மற்றும் நட்பு திமுகவிற்கு அவசியமாகிறது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் கேட்கப்பட்டபோது, “மத்திய அமைச்சரவையில் இணைவது மற்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து கட்சியின் உயர் தலைமை மற்றும் தலைவர்தான் இறுதி முடிவை எடுப்பார்” எனக் கூறியுள்ளனர். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தனது அமைச்சரவையை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ள சூழலில், இத்தகைய செய்திகள் தமிழக மற்றும் தேசிய அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
