ஈரோடு பெருந்துறையில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகப் பணியாற்றி வந்த கவுதமன் (26) என்ற இளைஞர், நேற்று அந்த அலுவலகக் கட்டிடம் இடிக்கப்படுவதை மேற்பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இடிக்கப்பட்ட கான்கிரீட் தூண் ஒன்று அவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்தக் கொடூர விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அலுவலகத்திலேயே அக்கட்சியைச் சேர்ந்த இளம் நிர்வாகி தூண் விழுந்து பலியான இந்த விபத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
