சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயல்வதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார். மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு, அவருக்குப் பின்னால் செயல்பட்ட கும்பல் மற்றும் துணையாக இருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கை மூடிமறைக்கப் பார்ப்பதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சாடினார்.
மணிகண்டன் பல பெண்களை ஏமாற்றி, மிரட்டி வீடியோ எடுத்துள்ள நிலையில், அவருக்குப் பின்னணியில் பெரிய கும்பலே இருப்பதாக ரகுபதி சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் தவெக நிர்வாகிகள் பலர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் சமரசம் பேசும் அளவிற்குச் சூழல் சீரழிந்துள்ளதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுக அரசு அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக எழுந்த தவெகவின் குற்றச்சாட்டுக்கு ரகுபதி மறுப்புத் தெரிவித்தார். 2025-இல் தன்னார்வலர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், அவர் அளித்த வீடியோ சான்றுகள் போதிய ஆதாரமாக இல்லாததால் அடுத்தகட்ட நடவடிக்கை தாமதமானதே தவிர, வழக்கை எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெற நீதிமன்றத்தில் கோரவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
புதிய ஆதாரங்களும் வலுவான சாட்சியங்களும் கிடைக்கும் பட்சத்தில் வீரமணி மீதான மேல் நடவடிக்கைகள் கண்டிப்பாகத் தொடரும் என உறுதியளித்த ரகுபதி, தவெக தரப்பு அரசியல் ஆதாயத்திற்காகத் தொடர்ந்து பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகச் சாடினார். மக்கள் மத்தியில் எது உண்மை, எது பொய் என்ற குழப்பத்தை ஏற்படுத்த தவெக முயல்வதாகத் தெரிவித்த அவர், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
