அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்விகள் அக்கட்சியைப் பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தோல்விக்குப் பிந்தைய சூழலில் நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை நோக்கிப் படையெடுப்பது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பல மாவட்டங்களில் கட்சியின் உட்கட்டமைப்பு சீர்குலைந்துள்ள நிலையில், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே எழுந்துள்ள குழப்பமும் அதிருப்தியும் அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அம்பத்தூர் மற்றும் ஆவடி சட்டமன்றத் தொகுதிகளில் இந்த உட்கட்சி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர் மீது அப்பகுதி நிர்வாகிகள் கடும் அப்செட்டில் உள்ளனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு தொண்டர்களை ஒருங்கிணைக்கத் தவறியது, கட்சிப் பணிகளை முடக்கியது மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காகக் களமிறங்காமல் ஒதுங்கியிருந்தது போன்றவை அவர் மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகளாகும். இதனால் இவ்விரு தொகுதிகளிலும் அதிமுகவின் களப்பணி முற்றிலும் முடங்கிப்போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

மாவட்டத் தலைமையின் இந்த மந்தமான செயல்பாட்டால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், தங்கள் அதிருப்தியைப் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மூலமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் வைக்கப்பட்டும் கட்சி விளம்பரங்களில் மாவட்டச் செயலாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் புறக்கணித்து, தலைமைக் கழகத் தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட அதிமுகவுக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதோடு, தலைமையை மீறி நிர்வாகிகள் தன்னிச்சையாகச் செயல்படும் சூழலையும் உருவாக்கியுள்ளது.

   

வரும் நாட்களில் இந்தத் தொகுதிகளில் அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமானால், களப்பணியில் தொய்வு காட்டும் மாவட்டத் தலைமை மாற்றப்பட வேண்டும் அல்லது பிரச்சனைக்குரிய நிர்வாகிகளை அழைத்து தலைமை உடனடியாகச் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் உட்கட்சிப் பூசலைக் கண்டுகொள்ளாமல் விட்டால், அம்பத்தூர் மற்றும் ஆவடி மண்டலங்களில் கட்சியின் முகவரியே காணாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.