“EPS போட்ட செம ஸ்கெட்ச்”… கவுன்சிலர் ராஜலட்சுமி திடீர் விலகல்… செந்தில் பாலாஜி ஏரியாவிலேயே திமுகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக….!

By Nanthini on பங்குனி 28, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை மாநகராட்சியின் 77-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், ஆளுங்கட்சியின் ஒரு முக்கிய பிரதிநிதி எதிர்க்கட்சிக்கு மாறியிருப்பது திமுகவினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னெடுப்பால் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை களமிறக்கி தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என திமுக பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில், ராஜலட்சுமியின் விலகல் ஆளுங்கட்சிக்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளாகக் கட்சியில் விசுவாசமாகப் பணியாற்றிய ஒருவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது.

   

தன்னுடைய விலகலுக்கான காரணம் குறித்துப் பேசிய ராஜலட்சுமி, திமுகவில் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை மற்றும் சுதந்திரம் வழங்கப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் பூத் அளவிலான பணிகள் கூட தனக்கு ஒதுக்கப்படவில்லை என்றும், கட்சியின் பிரதிநிதிகள் தங்களை மீறிச் செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை சிறப்பாக இருப்பதாகவும், தன்னைப் போலவே மேலும் சில திமுக கவுன்சிலர்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருப்பது திமுக தலைமைக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

   

அதிமுக ஏற்கனவே 150 வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் வேகம் காட்டி வரும் நிலையில், இந்த கட்சி தாவல் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் தனது பலத்தை நிரூபிக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில், வார்டு அளவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும். இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து கோவையின் மற்ற வார்டுகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் திமுக தீவிரப்படுத்தியுள்ளது.