தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவர்களின் எண்ணத்தில் மண்ணைத் தூவும் வகையில் அதிரடியாக கிட்டத்தட்ட 200 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. சில கூட்டணி கட்சிகளை நம்ப முடியாது என்ற நிலையை திமுக உணர்ந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மீது இந்த சந்தேகம் உள்ளது. அவர்கள் திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது விஜய் பக்கம் போகலாமா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பலரும் கூட்டணி குறித்து இருதரப்பு கருத்துக்களையும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
இதையெல்லாம் திமுக தலைமை கணக்கில் கொண்டு தானே களத்தில் இறங்கும் முடிவை எடுத்துள்ளது. 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு தான். திமுக கூட்டணியில் 40 சீட்டுகள் வரை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. பீகார் தேர்தல் தோல்வி தான் இதற்கு முக்கிய காரணமாகும். கூடுதல் தொகுதிகளை கேட்கும் கட்சிகள் எல்லாம் வெளியேறினால் திமுக போட்டி போடாமல் இருக்க முடியுமா? இது ஒரு புதுவிதமான கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. யார் யார் தன் பக்கம் வருகிறார்களோ அவர்களை சேர்த்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதியில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிகவும் பலமாக இல்லை என்று திமுக கருதுகிறது. அதிமுகவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் 20 முதல் 22 சதவீத வாக்குகள் கிடைத்தது. பாஜகவுக்கு 18 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது. ஆனாலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு அந்த பலம் கூட இப்போது இல்லை. விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்க உள்ளார். அப்படியே இருந்தாலும் விஜய் 45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறப்போவதில்லை. திமுக ஆட்சியில் பல நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளது.
மக்கள் அனுசரணையாக இருக்கிறார்கள் என்று திமுக நம்புகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு திமுக தனக்கு வெற்றி சாதகமாக இருப்பதாக நினைக்கிறது. ஆகையால் உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதிகளில் நிற்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து வெற்றி பெற்றும் காண்பித்தார். அது ஏன் திமுகவால் முடியாதா என்று தலைமை நினைத்ததால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு கூட்டணி கட்சிகளுக்கு செக் வைப்பதாக அமைந்துள்ளது. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
