தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கும் என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்தாலும், மற்ற கட்சிகளைத் தொடர்ந்து ஆதரிப்பதாலேயே தனது பலத்தை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். விஜய்யுடன் கைகோர்ப்பதன் மூலம் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மீண்டும் வரலாறு படைக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனிநபர்கள் கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், எஸ்.ஏ.சந்திரசேகர் விடுத்த அழைப்பு என்பது மக்களின் பொதுவான கருத்தாகவே பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி குறித்துத் தனது இறுதி முடிவை விஜய் சரியான நேரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தவெகவின் தனித்துவமான கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
