திமுக – பாஜக கூட்டணி?…. அமைதி காக்கும் அறிவாலயம்… பா.சிதம்பரம் உடைத்த உண்மை…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

மாறிவரும் அரசியல் சூழலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கப் போவதாகவும், மத்திய அமைச்சரவை மாற்றத்தில் திமுக பங்கேற்கக்கூடும் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பழைய கூட்டணிக் கட்சிகள் பிரிந்த நிலையில், திமுக தனிமைப்படுத்தப்பட்ட சூழல் உருவானதால் இந்த அரசியல் யூகங்கள் மேலும் வலுப்பெற்றன.

இந்நிலையில் பிரபல தி இந்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், திமுக – பாஜக இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்பை மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் முற்றிலுமாக மறுத்துள்ளார். “திமுகவும் பாஜகவும் எதிர்காலத்தில் நெருங்குவதற்கு அல்லது கூட்டணி அமைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை; அப்படியே அவர்கள் செய்தால், அது அவர்களுக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் பெரும் பின்னடைவாக அமையும்” என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆகவே தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திமுக ஆதரித்ததை நினைவுகூர்ந்த அவர், இதன் மூலமே திமுகவின் கொள்கை நிலைப்பாடு தெளிவாக வெளிப்பட்டுவிட்டது என்றார்.

   

கூடுதலாக, தேசிய அளவில் தீவிரமடைந்துள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் (NTA) போதுமான நிரந்தர ஊழியர்கள் இல்லாத நிலையும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் முறையான கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்வு நடத்துவதுமே இத்தகைய குளறுபடிகளுக்குக் காரணம் என்றும், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற போட்டித்தேர்வுகளைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களையும் அவர் எடுத்துரைத்தார்.