“மாமன்றமா? திரையரங்கமா?” விசில் அடிச்சு கெத்து…நெல்லை மாநகராட்சியில் மோதிக்கொண்ட திமுக – தவெக…. புதிதாக வெடித்த அரசியல் போர்… மேயரின் தடாலடி உத்தரவு…!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு கவுன்சிலர் அல்லா பிச்சை கலந்துகொண்டார். கட்சி மாறிய சில வாரங்களிலேயே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அவர் தனது புதிய கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக நடந்துகொண்ட விதம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட அரங்கிற்குள் நுழைந்த அல்லா பிச்சை திடீரென விசில் அடித்ததால், அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மாமன்றத்தை ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டமாக மாற்றக்கூடாது என அவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் விசிலைப் பறிக்க முயன்றதும், தொடர்ந்து அவர் விசில் அடித்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர் தண்ணீர் பாட்டில்களை வீசி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததும் மாமன்றத்தில் பெரும் குழப்பத்தையும் அமளியையும் உருவாக்கியது.

   

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மன்றத்தின் அமைதியைக் கெடுக்கும் வகையிலும் கேலிக்கூத்தாக்கும் விதமாகவும் செயல்பட்ட அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, மாமன்ற விதிகளை மீறியதாகக் கூறி கவுன்சிலர் அல்லா பிச்சையை வரவிருக்கும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என மேயர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திமுக மற்றும் த.வெ.க இடையேயான அரசியல் மோதல் தற்போது உள்ளாட்சி மன்றத்திற்குள்ளும் எதிரொலித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.