தவெக-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. விஜய் உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் மாவட்டச் செயலாளர் – பெண் பிரமுகர் எஸ்பி-யிடம் பரபரப்பு புகார்..!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

தென்காசி காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரான செல்வி, நேற்று தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தென்காசி மத்திய மாவட்ட தவெக அமைப்பில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும், கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் பெண்களைச் சற்றும் மதிப்பதில்லை என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கட்சியின் கொள்கைகளுக்கு மாறான செயல்பாடுகள் மாவட்ட அளவில் நடைபெற்று வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ், ராபின் என்ற தவறான நபரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு, கட்சிக்காக உழைத்த பலரைத் தொடர்ந்து நீக்கி வருவதாக செல்வி வேதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் மகளிருக்கு எப்போதும் உதவியாகவும் அரணாகவும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் முரணாகத் தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் சாடியுள்ளார். தவெக உட்கட்சி விவகாரம் தொடர்பாகப் பெண் பிரமுகர் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.