இனி தப்பிக்கவே முடியாது…. டாஸ்மாக் ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…. வெளியான பரபரப்பு அறிக்கை…!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனத்தில், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தமிழக அரசு ஊதிய உயர்வு அறிவித்த நிலையில், இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் வசூல் புகார் குறைந்தபாடில்லை.

   

இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் திருத்தியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இந்த கடுமையான உத்தரவை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விதிமுறைகளை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்கள் மீது எவ்விதத் தாட்சணியமும் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

   

புதிய நடைமுறையின்படி, முதல்முறையாகக் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். இரண்டாவது முறையாக இதே தவறைச் செய்தால் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையும் விதிமீறலில் ஈடுபட்டால், உடனடியாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தப்படும்; அதில் தவறு உறுதி செய்யப்பட்டால் அவர் நிரந்தரமாகப் பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்படுவார்.

 

மேலும், இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் பணியாளர்களின் அனைத்து விவரங்களும் அவர்களின் அதிகாரப்பூர்வ பணிப் பதிவேட்டில் தவறாமல் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் கூடுதல் கட்டணப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.