காதலனா? கணவனா? துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பார்சல்… சினிமாவை மிஞ்சும் கொடூரம்… காட்டிக்கொடுத்த சென்ட்ரல் சிசிடிவி… போலீஸ் வலைவீச்சு…!!

By Gayathri on ஆவணி 7, 2026

Spread the love

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீசார், அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சடலம், சென்னையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையின் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து ஆக்ரா போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் இந்த மர்ம சூட்கேஸை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து, ரயிலில் வைத்துவிட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்குச் சென்று, வேறொரு ரயிலில் ஏறி தப்பிச் சென்றதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

   

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட ஜவுளிக்கடை கவர், அதிலிருந்த சில ரசீதுகள் மற்றும் பில்கள் ஆகியவற்றை முக்கிய தடயங்களாகக் கொண்டு, கொலையுண்ட நபர் யார் என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொடூர கொலையைச் செய்து உடலை ரயிலில் அனுப்பி வைத்த அந்த மர்ம நபர்கள் யார், அவர்கள் எதற்காக இந்த கொலையைச் செய்தார்கள் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.