கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. பொதுமக்களுக்கு வெளியான மிக முக்கிய தகவல்..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி சுமார் ₹6,000 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தங்கம் விலை உயர்வை கணக்கில் கொண்டால், புதிய தள்ளுபடி அறிவிப்பிற்கு அரசுக்கு சுமார் ₹25,000 கோடி வரை கூடுதல் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது. இது ஏற்கனவே கடனில் இருக்கும் அரசுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், கிராமப்புற வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஏற்கனவே கல்விக்கடன் ரத்து மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை முன்வைத்துள்ள நிலையில், திமுகவும் இதற்குப் போட்டியாகப் புதிய சலுகைகளை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதனால், வரும் தேர்தலில் ‘நகைக்கடன் தள்ளுபடி’ என்பது ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.