இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் விடுதலை படத்தில் சூரியை ஹீரோவாக தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், இந்த படத்தின் கதையே ஒரு சாதாரணமான மக்கள் தினம் தினம் தங்கள் வாழ்க்கையை கடந்து அடுத்த நாளுக்காக காத்திருக்கின்ற ஒரு எளிமையான கதை தான். அந்த எளிமையின் காரணமாகவே சூரிக்கு இது சரியாக இருக்கும் என்று அவரை ஹீரோவாக தேர்வு செய்தேன். அவருடைய பேச்சு மற்றும் எளிமை இந்த படத்திற்கு அப்படியே பொருந்தியது. அவருக்கு ஏற்றது போலவே கதையையும் சற்று அங்கங்கு மாற்றி அமைத்தேன். குறிப்பாக முதலில் பயிற்சிக்கு வரக்கூடிய போலீஸ்காரர் எப்படி இருப்பார் என்பது ஏற்றது போல சூரியன் உடல் அமைப்பும் இருந்ததால் அப்படியே இந்த கதை அவருக்கு கச்சதமாக பொருந்தியது என்று வெற்றிமாறன் பேசியுள்ளார்.
