தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான். அதன் பின்னர் ஷங்கர் தடுமாறி வருகிறார் என்பது கண்கூடு.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், நடித்து வரும் ‘கேம்சேஞ்சர்’ படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவானாலும், இந்தியன் 2 நெகட்டிவ் விமர்சனங்கள் அந்த படத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இந்த படத்துக்குக் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். ஷங்கர் முதல் முதலாக இன்னொரு இயக்குனரின் கதையைப் படமாக்குவது இதுவே முதல் முறை.
இதுபற்றி பேசியுள்ள ஷங்கர் “ இந்தியன் 2 படம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே, பல தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்களுக்குக் கதை கேட்டார்கள். அப்போது என்னிடம் இருந்த கதைகள் எல்லாமே பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தன. அப்போதுதான் இயக்குனர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் கார்த்திக் சுப்பராஜின் இந்த கதைப் பற்றி தெரியவந்தது. அதைக் கேட்டதும் எனக்கு சுவாரஸ்யமாகத் தோன்றியது. அதை வாங்கி, நான் என் ஸ்டைலுக்கு மாற்றித் திரைக்கதை அமைத்து இயக்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.
