தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது.

90 களுக்குப் பிறகு வந்த பல நல்ல இயக்குனர்கள் இளையராஜாவை தேடிச் செல்லாமல் ரஹ்மான் பக்கம் சென்றனர். அப்படி சென்ற இயக்குனர்களில் ஒருவர்தான் ஷங்கர். அவர் தன்னுடைய படங்கள் பெரும்பாலானவற்றுக்கு ரஹ்மானைதான் பயன்படுத்தினார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஒரு மேடையில் பேசும்போது “எனக்கு என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார்தான் இசையமைக்க வேண்டும் என ஆசை. ஆனால் எனக்கு அவரிடம் கொஞ்சம் பயம். அவரிடம் எப்படி ட்யூன் வாங்குவது. எப்படி கரெக்ஷன் சொல்வது என்றெல்லாம். அதனால்தான் நான் அவரிடம் செல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.
