தமிழ் திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர். இந்திய சினிமாவில் புதிய பரிணாமங்கள் கொண்ட படங்களையும் புதுவிதமான கதைகளையும் அறிமுகப்படுத்தி வைத்த இவருக்கு தற்போது 61 வயதாகிறது. சினிமா டயலாக் ஆக இருந்தாலும் பெரிதாக யோசித்தால் தான் பெரிதாக வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்களுள் ஒருவர் ஷங்கர். இவருடைய முதல் படமான ஜென்டில்மேன் பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து அடுத்து இயக்கிய காதலன், இந்தியன் மற்றும் ஜீன்ஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிம்பிளான ஃபீல் குட் காதல் படமாக இருந்தாலும் அதிலும் பிரம்மாண்டம் காட்டுவது தான் இவருடைய வேலையாக இருந்தது.
அதற்கு ஏற்ப கதை மற்றும் திரைக்கதையையும் தயார் செய்யும் இவர் அன்று முதல் இன்று வரை தன் படங்களில் எந்த வகையான புது டெக்னாலஜியை உபயோகிக்கலாம் எதை புதிதாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டிருப்பார். இயக்குனர் சங்கர் இந்திய சினிமாவின் பெரிய இயக்குனராக விளங்கினாலும் இதுவரை வெகு சில படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் இதுவரை சுமார் 17 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் சரியாக இரண்டு அல்லது மூன்று வருட இடைவேளை எடுத்துக் கொள்வார்.
அதன் பலனாக கிடைக்கும் அவுட்புட்டும் கச்சதமாக இருக்கும். ஆனால் இந்தியன் 2 திரைப்படம் தான் சமீபத்தில் சொதப்பி விட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை என்பதாலும் லாஜிக் இல்லாத காட்சிகளாலும் படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சனத்திலும் மரண அடி வாங்கியது. இதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து இவர் இறுதியாக கேம் சேஞ்சர் திரைப்படத்தை உருவாக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திரை வாழ்க்கை குறித்து பலரும் அறியாத சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், நான் சினிமாவுக்கு நடிப்பதற்காகத்தான் வந்தேன். அப்போது வாய்ப்பு கிடைக்காததால் உதவி இயக்குனராக பணியாற்றினால் நமக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதை நன்றாக கற்றுக் கொண்டேன். அப்போ எனக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி மற்றும் இமாஜினேஷன் இருந்ததால் ஒரு படம் பண்ணலாம் என்ற கான்ஃபிடன்ஸ் வந்தது. உதவி இயக்குனராக இருக்கும்போது எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்து இயக்குனராகலாம் என்ற எண்ணமும் மனதில் வந்த பிறகுதான் ஜென்டில்மேன் படத்தை இயக்கினேன். நான் நினைத்தபடியே அந்தப் படமும் நன்றாக வந்தது என்று சங்கர் பேசியுள்ளார்.