தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, நட்டி மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. படக்குழுவினர் சென்னை முதல் மலேசியா வரை ஓவர் பில்டப் கொடுத்த நிலையில் படம் மொக்கை வாங்கியது. நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் படத்தை அதிகமாக ட்ரோல் செய்தனர்.

அதே சமயம் நடிகையும் சூர்யாவின் மனைவியும் ஆன ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். கங்குவா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்மறை விமர்சனங்களால் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்படியான நிலையில் கங்குவா திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் பற்றி அலங்கு திரைப்பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசினார். அப்போது, ஒரு கதை வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆடியன்ஸ் விரும்புகிறார்கள். நம்மை விட ஆடியன்ஸ் 200 மடங்கு சினிமாவை பார்த்து படித்து வளருகிறார்கள். ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்றால் ஆடியன்ஸ்க்கு கோபம் அதிகமாக வருகின்றது.

அதனால் தவறாக பேசுகிறார்கள். நான் இன்னும் கங்குவா படம் பார்க்கவில்லை. அந்தப் படத்தின் விமர்சனங்கள் வந்தது. விமர்சனங்களை கருணையுடன் கூற வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல நடிகரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் தற்போது சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இல்லை. அவர்களுடன் நடித்த சிவகுமார் தான் இருக்கின்றார். அவர்கள் வீட்டில் இருந்து வந்த சூர்யா கார்த்தியை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடனே நான் சூர்யாவுக்கு கதை சொல்லப் போகிறேன் என கூறுவார்கள். நான் சூர்யாவுக்கு கதையே சொல்ல மாட்டேன். அவர் படம் கொடுத்தால் கூட இயக்க மாட்டேன். ஒரு படம் இயக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் படம் இயக்க வாழ்க்கை மறந்து வேலை செய்கிறோம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மிஸ்கின் கூறியுள்ளார்.
