தமிழ் சினிமாவில் கதாசிரியராக, நடிகராக, தயாரிப்பாளராக பன்முகத் திறமையோடு இயங்கியவர்தான் வினு சக்ரவர்த்தி. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அரசுப் பணியில் வேலை செய்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியராக சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு உதவி இயக்குனராக பணியாற்றிய பாரதிராஜாவுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. புட்டண்ணா கனகலுடன் இவர் இணைந்து உருவாக்கிய கதையான பரசக்கே கண்ட தின்மா என்ற படம் தமிழில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாசிரியராக அறிமுகமானார்.
அதன் பின்னர் நடிகரான இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரித்த வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் தான் தென்னிந்தியாவைக் கலக்கிய சில்க் ஸ்மிதா அறிமுகமானார். அதன் பிறகு வினு சக்ரவர்த்தியும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரானார்.
அவர் படங்களில் நடிக்கும் போது பெரும்பாலும் இயக்குனர்கள் பேச்சைக் கேட்காமல் தன்னிஷ்டப்படிதான் நடந்துகொள்வார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு. அதுபோன்ற ஒரு சம்பவத்தைதான் இயக்குனர் களஞ்சியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் “என்னுடைய முதல் படமான பூமணியில் வினு சக்ரவர்த்தி சாருக்கு ஒரு கிராமத்து பெரியவர் வேடம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அவர் பெரிய விக், கைகளில் எல்லாம் மோதிரம். மிடுக்கான வேட்டி சட்டை என களேபரமாக வந்தார். அந்த கெட்டப் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சுத்தமாகப் பொருந்தாது. இதை உதவி இயக்குனர்கள் போய் சொன்னால் திட்ட ஆரம்பித்துவிட்டார். எவண்டா அவன் டைரக்டர். சினிமா தெரியாம சினிமா எடுக்க வந்துருக்கான் எனக் கத்த ஆரம்பித்துவிட்டார்.
அப்புறம் ஹீரோ முரளி சார் வந்து பேசி இயக்குனர் திறமையானவர், நல்லா எடுக்குறார். எனக்கும் மேக்கப் கிடையாது என சொன்னபிறகுதான் அவர் மேக்கப் இல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனாலும் கடைசி வரையில் அவர் ஒரு புரியாத புதிராகவே இருந்தார்” எனப் பேசியுள்ளார்.