தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.
1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
சமீபத்தில் கூட இசை பெரிதா தமிழ் பெரிதா என்ற சர்ச்சையில் வைரமுத்து சிக்க அவரை கங்கை அமரன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதனால் இனிமேல் வைரமுத்துவும் இளையராஜாவும் இணைய வாய்ப்பே இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது.
இந்நிலையில் இயக்குனர் மு களஞ்சியம் இது சம்மந்தமாக மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு என்பது கலைஞர்களுக்குள் எப்போதும் நிகழ்வதுதான். அதை சரியான ஆட்கள் பேசி தீர்த்திருந்தாலே சரியாகி இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் வெளியில் சொல்லப்படுவது போல இளையராஜா அவர்களுக்கு ஒன்றும் வைரமுத்து மேல் பெரிய கோபம் எல்லாம் இல்லை. எப்படி சொல்கிறேன் என்றால் நான் என் படத்துக்கு பாடல் எழுத வாசன் என்ற கவிஞரி கவிதைப் புத்தகத்தை இளையராஜா அவர்களிடம் கொடுத்தேன். அதைப் படித்த அவர் ‘இப்போது வரும் கவிஞர்களால் வைரமுத்துவின் தாக்கம் இல்லாமல் கவிதை எழுத முடியாது போல’ என்று சொன்னார்.
வைரமுத்து மேல் கோபம் இருந்தால் அவர் ஏன் எப்படி சொல்லியிருக்க வேண்டும்.” என பேசியுள்ளார்.