தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே கருத்தைதான் எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி மேல் ஒரு குற்றச்சாட்டாக வைத்தனர்.
இந்நிலையில் சத்யஜித் ரே, ரித்விக் கடக் போன்ற திரை மேதைகளோடு வைத்து ஒப்பிடத்தகுந்தவர் வங்காள இயக்குனர் மிருனாள் சென். அவர் பல உலகப் பட திரைப்பட விழாக்களில் தேர்வாளராக இருந்துள்ளார். இவருக்கும் சிவாஜியின் நடிப்பின் மேல் இதே மாதிரியான அபிப்ராயம்தான் இருந்துள்ளது.
அவர் ஒருமுறை சிவாஜியின் நடிப்புப் பற்றி பேசும்போது “எனக்கு கமல்ஹாசனின் நடிப்புதான் பிடித்துள்ளது. சிவாஜி கணேசன் நடிப்பு பற்றி பேசும்போது எனக்கு அழுது நடிப்போரைக் கண்டாலே பிடிக்காது. ஆண்கள் அழக் கூடாது. அழுகை என்றுமே நடிப்பாகாது என்றாராம். இதை எழுத்தாளர் ஆர் பி ராஜநாயஹம் தன்னுடைய சினிமா எனும் பூதம் நூலில் பதிவு செய்துள்ளார்.