தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக நல்ல படங்களை தந்துக்கொண்டு இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படம் மூலம், சினிமா இயக்குநராக, ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு, அஞ்சாதே, முகமூடி, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற சிறந்த படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். சவரக்கத்தி, ஓ நந்தலாலா, மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார்.
நேற்று மாலை நடந்த லியோ பட வெற்றிவிழாவில் மிஷ்கின் பேசியதாவது, 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜயை, லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். தனது அயராத உழைப்பால் அவர் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். நான் லெஜண்ட்களாக நினைப்பது புருஸ்லீ மற்றும் மைக்கேல் ஜாக்சன் ஆகிய இருவரையும்தான். ஆனால், நான் நேரில் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய் மட்டும்தான். இதை நான் புகழ்ச்சியாக சொல்லவில்லை. அவரது அடுத்த பட வாய்ப்புக்காக சொல்லவில்லை. நெஞ்சில் ஆழத்தில் இருந்து, இதயத்தில் இருந்து சத்தியமாக சொல்கிறேன். விஜய் போன்ற சிறந்த மனிதர்கள், 200 ஆண்டுகள் வாழ வேண்டும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் லியோ படம் குறித்து நான் ஒரு பேட்டியில் சொன்ன போது, தம்பி விஜய் லியோ படத்தை பார்த்துவிட்டான் என சொல்லி விட்டேன். இதற்கு கோபப்பட்ட விஜய் ரசிகர்கள், எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி விட்டார்கள். ஆனால், நிச்சயமாக விஜய் ரசிகர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் விஜய் உடன் இருப்பவர்கள் சாக முடியாது, வாழவே முடியும். சிலர் சினிமாவில் மட்டுமே ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் விஜய் சினிமாவிலும் ஹீரோ, நிஜத்திலும் ஹீரோ என பேசி இருக்கிறார் மிஷ்கின்.
