இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த இயக்குனர்கள் ஏராளம் பேர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமானப் படைப்புகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் அவரிடம் இருந்து சில கவிஞர்களும் பாடல் ஆசிரியர்களும் கூட வெளிவந்துள்ளார்கள்.
அதில் ஒருவர்தான் மறைந்த பாடல் ஆசிரியரும் கவிஞருமான நா முத்துகுமார். முத்து குமார் இயக்குனர் ஆகவேண்டுமென்ற ஆசையோடுதான் சினிமாவுக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய சக உதவி இயக்குனர்தான் வெற்றிமாறன்.
ஆனால் ஒரு கட்டத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததும் அவர் பாலு மகேந்திராவை விட்டு சென்றுவிட்டார். அது பற்றி பாலு மகேந்திரா கோபத்தோடு பேசினாராம். வெற்றிமாறன் தன்னுடைய மைல்ஸ் டு கோ புத்தகத்தில் இதுபற்றி “அவன் தனக்கு இயக்குனராகும் ஆளுமை இல்லை என்று நினைக்கிறான். அவன் மேல் அவனுக்கே நம்பிக்கை இல்லை. அவனை நாம் என்ன செய்ய முடியும். அவன் பாடல் ஆசிரியனாகவே வரட்டும்” என்று சொன்னாராம். ஆனால் முத்து குமாரின் முதல் ஹிட் பாடல் பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற ‘எனக்குப் பிடித்த பாடல்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
90 களின் இறுதியிலேயே பாடல்கள் எழுத ஆரம்பித்தாலும் முத்துகுமாருக்கு பிரேக் கிடைத்தது எல்லாம் 2000 க்குப் பிறகுதான். பல இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்த முத்து குமார் ரஹ்மான் இசையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றது ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படத்தில்தான்.
அந்த படத்துக்காக பாடல் எழுத சென்ற போதுதான் அவருக்கு தெரிந்ததாம் இயக்குனர் மணிரத்னம்தான் தன்னுடைய கவிதைகளையும் பாடல்களையும் பற்றி நல்ல விதமாக சொல்லி ரஹ்மானிடம் தனக்குப் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் என்று. அதற்காக தன்னுடைய கண்பேசும் வார்த்தைகள் என்ற புத்தகத்தில் அவருக்கு நன்றி கூறியுள்ளார்.
நா முத்துகுமாரைப் பற்றி மணிரத்னம் பெருமையாகப் பேசி ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாலும் கடைசி வரை தன் படங்களில் அவருக்கு ஒரு பாடல் கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.