பாலு மகேந்திரா எனக்கிருந்த வன்மம்தான் அதை செய்ய வைத்தது… ஓப்பனாகப் பேசிய இயக்குனர் பாலா!

By vinoth on டிசம்பர் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

   

பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.

   

 

அதை பல இடங்களில் பாலா வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பாலா பாலுமகேந்திரா பற்றி பேசும்போது “ஒரு படத்தில் பாலு மகேந்திராவிடம் இருந்த எல்லா உதவி இயக்குனர்களும் அவரை விட்டுப் போய்விட்டார்கள். நான் மட்டும்தான் ஒரே உதவி இயக்குனர். எல்லா வேலையும் நானே இழுத்துப் போட்டு செய்தேன். உன்னால் முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் மேல் இருந்த வன்மம்தான் காரணம். நான் அவரிடம் சேர்ந்த புதிதில் ஒரு நாள் அலுவலகத்துக்கு தாமதமாக சென்றேன். அப்போது என்னை சீக்கிரமா வந்து ஆஃபீஸ கூட்டணும்னு தெரியாதா என்று எல்லோர் முன்னாலும் கேட்டார். அப்போது அந்த வன்மம் உருவானது. ஒருநாள் இவர் என்னை சார்ந்து இருப்பார். அப்போது அவர் சொல்லும் வேலையை நான் செய்து முடிக்கவேண்டும் என்று. அப்படிதான் வேலை செய்தேன். இதனால் யாருக்குமே அஸோசியேட் இயக்குனர் என போடாத பாலு மகேந்திரா சார் எனக்கு அடுத்த படத்தில் அப்படி டைட்டில் போட்டார்” எனக் கூறியுள்ளார்.