திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் லாக் அப் மரணம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் அமீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டால் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்காது.
எந்த ஆட்சி இருந்தாலும் மேல் அதிகாரிகளின் உத்தரவின்படியே காவல் துறையினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதுதான் காவல் துறையின் சிஸ்டம். ஒரு சில காவல் அதிகாரிகள் மட்டுமே மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையை பொறுப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். அதுவும் ஒரு சிலரை மட்டும்தான் சொல்ல முடியும். பெரும்பாலானோர் தங்களுடைய மேலதிகாரிகள் என்ன உத்தரவிடுகிறார்களோ அதன் பேரில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு சாத்தான்குளம் விவகாரமும் திருபுவனம் விவகாரமும் வெளியில் வந்ததால் இதனை பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வெளியில் வராத எத்தனையோ சம்பவங்கள் உள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட இதை தான் அனைவருமே கடைப்பிடிக்கின்றன.
இதில் யாரையும் எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாது. தனிப்படையினர் தாக்கியதால்தான் அஜித்குமார் மரணமடைந்ததாக கூறுகிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே தாக்கி இருக்க மாட்டார்கள், மேல் அதிகாரி யாராவது அப்படி அடிக்க சொல்லி இருந்தால் மட்டும்தான் அன்று அது நடந்து இருக்கும். இதில் யாருக்கு எதிராகவும் நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன். மக்களும் அவரவர் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். இதில் யாரையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? அதுதான் என்னுடைய கேள்வி என்று பேசியிருக்கிறார்.
