தமிழ் சினிமாவில் தெய்வத் திருமகள் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏஎல் விஜய். அஜீத்குமார் நடித்த கிரீடம் படம்தான் அவரது முதல் படம். இயக்குனர் ஏஎல் விஜய் இவர் இப்போது மலேசியாவில் இருக்கிறார். நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக எடுத்து வருகிறார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஏஎல் விஜய் கூறியதாவது, மலேசியாவுக்கு அஜீத்குமார் என்னை அழைத்தார். கார் ரேஸிங் தொடர்பான விஷயங்களை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று சொன்னார்.
இதையடுத்து இங்கு நடக்கும் கார் ரேஸ் பயணத்தை நான் தினமும் படமாக்கி வருகிறேன். இப்போது இதை ஒரு டாக்குமெண்ட் படமாக எடுத்து வருகிறோம். அது திரைப்படமா, டாகுமெண்ட் படமாக இருக்குமா என்பது இப்போது சொல்ல முடியாது. கடைசியாக படமாக்கியதை மொத்தமாக பார்த்துவிட்டு தான் படமாக வெளியிடுவதா, டாக்குமெண்டாக வெளியிடுவதா என்பது குறித்து முடிவெடுப்போம்.
ஆனால் இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அதுமட்டுமின்றி கார் ரேஸ் என்பது மிகவும் கடினமானது. அதை அருகில் இருந்து பார்க்கும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது. சினிமாத்துறை வேறு. விளையாட்டுத்துறை வேறு. கார் ரேஸில் அஜீத்குமார் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் பார்ப்பது போல, கார் ரேஸ் போட்டிகளையும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று அஜீத்குமார் ஆசைப்படுகிறார் என்று இயக்குனர் ஏஎல் விஜய் கூறியிருக்கிறார்.
