திண்டுக்கல் முத்தழகுபட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நடிகர் விஜய் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்தார். “நான் நேர்மையானவன், ஊழல்வாதி இல்லை; எல்லாவற்றையும் வெள்ளை பணத்தில்தான் வாங்குவேன். என் சம்பளம் இவ்வளவுதான் என்று விஜய் பகிரங்கமாகச் சொல்ல வேண்டியதுதானே?” என்று அவர் கேள்வி எழுப்பினார். விஜய் கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு அரசியல் கட்சி நடத்துவது உண்மைதான் என்று கூறிய அவர், தான் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு விஜய் இதுவரை பதில் சொல்லவில்லை என்றும் சாடினார்.
மேலும், அமைச்சர் செங்கோட்டையன் குறித்துப் பேசுகையில், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று தண்டனை பெற்றவர் என்று விமர்சித்தார். விஜய் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவருமே தனது குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் விஜய் மீது ‘கருப்புப் பண’ புகாரை நேரடியாக முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
