தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழ்பெற்ற ‘மாஸ்டர்’ மகேந்திரன், தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளன. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு குறித்துப் பேசிய அவர், “என் வீட்டிலும் தான் மின்வெட்டு இருக்கிறது; அதற்காக முதலமைச்சர் விஜயை நோக்கி கேள்வி கேட்டால் உடனே கரண்ட் வந்துவிடுமா? மின்வெட்டு இருந்தால் கம்முனு இருக்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
மகேந்திரனின் இந்த பேச்சு வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருந்து வண்டி வண்டியாக கண்டனங்கள் குவியத் தொடங்கின. ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் மின்சாரம் இல்லாமல் தவித்து வரும் வேளையில், பொறுப்பற்ற முறையில் இப்படிப் பேசுவது ஒரு மேட்டுக்குடித்தனமான அணுகுமுறை என்று பலரும் சாடி வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரிடம் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவதுதான் ஜனநாயகம் என்றும், அதை விடுத்து கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் சமூக ஆர்வலர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே தீவிர விஜய் ரசிகரான மாஸ்டர் மகேந்திரன், சினிமாவில் விஜய் ரசிகர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவர்களின் கைதட்டல்களைப் பெறவுமே இத்தகைய நியாயமற்ற வாதத்தை முன்வைப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து மகேந்திரன் பேசிய இந்த ‘மின்வெட்டு’ வாதம் தற்போது அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளதுடன், கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
