“தனது உயிர் போகும் நிலை வந்தாலும் அஇஅதிமுகவிலேயேதான் நீடிப்பேன்” என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர், தனக்கு என்றும் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் தான் அடையாளம் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வரிசையில் தற்போது தங்களுக்கு எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் எல்லாம் என்று குறிப்பிட்ட அவர், எவ்வளவு பெரிய அரசியல் சூழல் மற்றும் நெருக்கடிகள் வந்தாலும் கட்சியில் தனது நிலையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என சவால் விடுத்துள்ளார். மேலும், தான் கட்சி மாறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் சில விஷமிகளால் திட்டமிட்டு கிளப்பிவிடப்பட்டவை என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் தான் அதிமுகவை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தனது தீவிர விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
