தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனித்துப் போட்டியிட்டு அரியணையைக் கைப்பற்றியுள்ளது. கட்சித் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தவெக பெற்ற இந்த அபார வெற்றியும், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகளால் செரித்துக்கொள்ள முடியவில்லை. தவெகவின் வளர்ச்சியையும், மக்கள் விஜய் மீது வைத்த நம்பிக்கையையும் சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், புதிய அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் எதிராகத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜய்யின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தவெக அரசு வெறும் ரீல்ஸ்களையும் விளம்பரங்களையும் நம்பியே இயங்குகிறது என்றும், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இதனிடையே, அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் சென்றதும், அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏவும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும் தினகரனுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெக ஆட்சிக் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகக் கொந்தளிக்கும் அவர், எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியான தருணத்திலேயே தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்கப் பல உத்திகளை தினகரன் கையாண்டதாகச் செய்திகள் வெளியாகின. திமுகவின் மறைமுக ஆதரவோடு அதிமுக ஆட்சியைப் பிடிப்பது, திருமாவளவனை முதலமைச்சராக்குவது அல்லது சௌமியா அன்புமணியைத் துணை முதலமைச்சராக்கிப் புதிய கூட்டணி அமைப்பது எனப் பல பின்னணி திட்டங்களுக்குப் பின்னால் அவர் இருந்ததாகக் கூறப்பட்டது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு பின்னணி வேலையில் இறங்கி, விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்றியுள்ளன.
