தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் ஆடம்பர வாழ்க்கை வாழும் ஆசையில், பகலில் வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, சித்தப்பா மற்றும் இரண்டு கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்த், அவரது தம்பி சந்தோஷ், ஆனந்தின் மகள் யசோதா மற்றும் யசோதாவின் தோழி வெண்ணிலா ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இளம் பெண்கள் இருவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு அப்பாவும் சித்தப்பாவும் உடந்தையாக இருந்து, காரிமங்கலம் அருகே சொட்டாண்டஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, செகண்ட் ஹேண்ட் காரில் பகல் நேரங்களில் கிராமம் கிராமமாகச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை செல்போனில் வீடியோ எடுத்து நோட்டமிட்டுள்ளனர். குடும்பமாகச் செல்வதுபோல் இருந்ததால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு காரிமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஹோண்டா காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காருக்குள் கேஸ் சிலிண்டர், ஸ்டவ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்ததோடு, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோதுதான் இந்தத் திருட்டுப் கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து 12 கிராம் தங்கம், ரூ.40,000 ரொக்கம், டிவி, பாத்திரங்கள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். கல்லூரிக்குச் சென்று படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டிய வயதில், இளம் பெண்கள் விபரீத ஆசையில் இறங்கியதும், பெற்ற தந்தையும் சித்தப்பாவும் அவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாகத் துணை நின்றதும் பொதுமக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உழைக்காமல் எந்தச் செல்வமும் கிடைக்காது என்ற உண்மையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சமூகத்திற்கு உணர்த்தியுள்ளது.
