தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதனிடையே நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ Netflix ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அது ஒரு ஆவண படமாக வெளியிடப்பட்டது. இதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாக தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவு 5 கோடி கூட வராத நிலையில் தன்னுடைய திருமணத்தை வைத்து நயன்தாரா பல கோடி லாபம் பார்த்ததாக விமர்சனங்களும் எழுந்தது.
அதேசமயம் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த சில முக்கிய திரைப்படங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் ஒன்று சேர காரணமாக இருந்த திரைப்படம் என்பதால் தங்களுடைய முதல் சந்திப்பு குறித்த காட்சியை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற செய்திருந்தனர். இப்படியான நிலையில் தனுஷ் தனது அனுமதி இல்லாமல் தான் தயாரித்த படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு வழக்கு தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் பட காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ், நயன்தாரா 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது மட்டுமல்லாமல் இந்த காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
இதற்கு நயன்தாரா திரைப்படத்தில் பயன்படுத்திய காட்சியை இந்த படத்தில் இணைக்கவில்லை என்றும் தங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாகவும் விளக்கம் அளித்தார். இப்படியான நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி இனி கால அவகாசம் கேட்கக்கூடாது என்றும் அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.