நடிகர் தனுஷின் சமீபத்திய நடவடிக்கைகள் தமிழ் திரையுலகைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மாவட்ட வாரியாகப் பலப்படுத்தி வரும் தனுஷ், நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் ரசிகர்களை சமூக சேவைகளில் ஈடுபட ஊக்குவிப்பது எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார். தனது 43வது பிறந்தநாள் விழாவில், “நம் ஒற்றுமைக்கு ஒரு சக்தியும் நோக்கமும் உண்டு” என்று அவர் பேசிய பேச்சு, 2031 அல்லது 2036 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அவர் அரசியலில் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையேயும் அரசியல் அவதானிகளிடையேயும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையும் வெற்றியும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷின் இந்த அரசியல் நகர்வுகள் குறித்த ஜோதிடக் கணிப்புகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட், தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்துத் தனது அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷின் ஜாதகத்தைக் கணித்துள்ளதாகக் கூறும் அவர், தனுஷின் அரசியல் நுழைவு தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் களத்தையே முற்றிலும் மாற்றியமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரிக்கி ராதன் பண்டிட்டின் கணிப்புப்படி, 2031 சட்டசபைத் தேர்தலில் விஜய்யை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் வரலாம். ஆனால், ஒருவேளை தனுஷ் அரசியலில் முறைப்படி கால்பதித்தால், இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் முக்கியத்துவமே குறைந்துவிடும் என்கிறார். தனுஷ் நேரடியாக அரசியல் களத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்றும், எதிர்காலத்தில் தமிழக அரசியல் போட்டி என்பது திமுக vs அதிமுக என்பதற்குப் பதிலாக ‘விஜய் vs தனுஷ்’ என்ற தளத்திற்கு மாறிவிடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
திரைத்துறையில் போயஸ் கார்டன் பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த இரு நாயகர்களின் போட்டி, இனி தமிழக அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற ஜோதிடரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்றியுள்ளது. தனுஷ் தனது ரசிகர் மன்ற அமைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதும், சத்தமில்லாமல் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதும் அவர் நீண்டகால அரசியல் திட்டத்தோடுதான் செயல்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எது எப்படியோ, சினிமா பிரபலங்களின் அரசியல் வருகை தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
