டெல்லிக்கு செக் வைக்கும் CM விஜய்….. திமுக, அதிமுக, பாஜகவை ஒரே அடியில் ‘லாக்’ செய்ய ரகசிய திட்டம்…. பட்ஜெட் நாளில் காத்திருக்கும் அந்த ஒரு சர்ப்ரைஸ்…!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முனைப்புடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசு, அடுத்தடுத்துப் பல அதிரடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசியலையே திருப்பிப் போடும் வகையில் இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வரும் 5-ஆம் தேதி தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் தனி விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் முதலாவதாக, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடைமையாக்கப்பட்ட மதுபான விற்பனையை மீண்டும் தனியார் மயமாக்குவது தொடர்பான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசே மதுபானங்களை விற்பனை செய்வதால் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. இதனால் ஏற்படும் அவப்பெயரைத் தவிர்க்கும் பொருட்டு, மது விற்பனையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கும் அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

   

அடுத்ததாக, 1986-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்ட ‘மேல்சபை’யை (சட்டமேலவை) மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற தவெக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆராய்ந்து திருத்தங்கள் சொல்லும் “ஆலோசனை சபை”யாகச் செயல்படும் இந்த மேல்சபை மூலம், மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் போன்ற பல்வேறு துறை சார்ந்த அறிவுஜீவிகளுக்கு வாய்ப்பளித்து தவெகவின் அரசியல் தளத்தை மேலும் வலுப்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது.

   

இருப்பினும், மேல்சபையைக் கொண்டு வர மாநில சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினாலும், மத்திய அரசின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது நிறைவேற வேண்டும். ஒருவேளை டெல்லி அரசு இதற்கு முரண்டு பிடித்தால் அதை வைத்து பாஜகவுக்கு எதிரான அரசியலையும், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இதை ஆதரிக்கவோ அல்லது எதிர்த்து வாக்களிக்கவோ வேண்டிய அரசியல் நிர்பந்தத்தையும் உருவாக்க தவெக வியூகம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது. டாஸ்மாக் தனியார்மயம் மற்றும் மேல்சபை உருவாக்கம் ஆகிய இவ்விரு நகர்வுகளும் சாத்தியமானால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.