தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், தனது தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட தீயணைப்பு ஆணையத்தின் முதல் தலைவராக அவர் பொறுப்பேற்ற நிலையில், பதவியேற்ற 9 மாதங்களிலேயே இந்த முடிவை எடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து தீயணைப்பு ஆணையத்தின் முக்கிய உறுப்பினர்களான நமச்சிவாயம், சத்தியமூர்த்தி, மற்றும் விக்ரம் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது காவல் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த முன்னாள் டி.ஜி.பி. சுனில் குமாரும், தமிழ்நாடு தகவல் ஆணையராகப் பணியாற்றி வந்த முன்னாள் டி.ஜி.பி. அபய் குமார் சிங்கும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து தங்களது அரசுப் பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
