நள்ளிரவில் உலுக்கிய 7.5 ரிக்டர் பூகம்பம்… வெனிசுலாவில் நிமிடங்களில் மாறிய சுடுகாடு… 164 பேர் பலியான அதிர்ச்சி பின்னணி…!

By SATHISH R on ஆனி 26, 2026

Spread the love

அமெரிக்க நாடான வெனிசுலாவில் இன்று அதிகாலை நேரிட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளன. இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் இயற்கை பேரிடரால் வெனிசுலா மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் வீரியத்தால், வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் நகரில் உள்ள ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்து தரைமட்டமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகப் பெருமளவில் தூசு மண்டலமாகக் காட்சியளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் வீடுகள் திடீரென குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

   

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தங்களின் உறவினர்களை மக்கள் கண்ணீருடன் தேடி வரும் நிலையில், மீட்புக்குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்திற்கு 164 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.