சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வைத்து துணை முதலமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானம் தமிழக அரசியலில் ‘துணை முதல்வர்’ பதவி தொடர்பான எதிர்பார்ப்புகளை மீண்டும் எரியூட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திடம் அப்படி ஒரு திட்டமே இல்லை என்ற மாற்றுத் தகவலும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தேர்தலுக்கு முன்பு நடிகர் விஜய் தன்னிடம் பேசும்போது தவெகவில் துணை முதல்வர் பதவி என்ற ஒரு யோசனையே இல்லை என்று கூறியதாக திருமாவளவனே ஒரு நேர்காணலில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கணக்குகளும், அரசியல் சூழல்களும் மாறக்கூடும் என்பதால், தவெகவின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவாக இருக்கும், இந்த விவகாரத்தில் விஜய் தனது முடிவை மாற்றுவாரா என்ற விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் அரசியல் வட்டாரத்தில் தற்போதும் தீவிரமாக நீடித்து வருகின்றன.
