ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்கப்போவதில்லை என நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கான தகுதிச் சான்று (FC) வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, சந்தையில் வெறும் ₹3,000 மதிப்பைக் கொண்ட ஜிபிஆர்எஸ் (GPRS) கருவியை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து ₹18,000 கொடுத்து வாங்குமாறு அதிகாரிகள் தங்களை நிர்பந்திப்பதாகப் பள்ளிகள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கட்டாய நடைமுறை மற்றும் போக்குவரத்துத் துறையின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வாகனங்களை இயக்கப் போவதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
