விவசாயக் கடன்கள் தள்ளுபடி ஆகுமா..?கூட்டுறவுக் கடன் வசூலை நிறுத்த வேண்டும் என.. முதலமைச்சருக்கு பறந்த முக்கிய அறிக்கை…!!

By Swetha on வைகாசி 17, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்றவுடன் இலவச மின்சாரம், சிங்கப்பெண் படை, போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தச் சூழ்நிலையில், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, அவர்களின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நலன் காக்க தேர்தல் வாக்குறுதியின்படி புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால், அதனைச் செலுத்தாத பட்சத்தில் 13 சதவீதம் வரை வட்டி செலுத்த நேரிடும். மேலும், இதனால் விவசாயிகள் மறுசாகுபடிக்குக் கடன் பெற முடியாத நிலை ஏற்படும் என்பதால், தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் மற்றும் கூட்டுறவு கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். உடனடியாக வேளாண் கூட்டுறவுக் கடன் வசூலை நிறுத்தி வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.