“அமெரிக்காவுக்கு ‘நோ’ சொன்ன ஸ்பெயின்…” ஈரானைத் தாக்க வான்பரப்பை மூட முடிவு…. டிரம்ப் மிரட்டலுக்குப் பதிலடி…!!

By Devi Ramu on பங்குனி 30, 2026

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தீவிரத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. இதில் ஈரானின் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரானைத் தாக்குவதற்காக ஸ்பெயினில் உள்ள தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால், அமைதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசு இதற்குத் திட்டவட்டமாக அனுமதி மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஸ்பெயினுடனான வர்த்தக உறவை முற்றிலும் துண்டிப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இந்த மிரட்டலுக்கு அஞ்சாத ஸ்பெயின் அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று அமெரிக்கப் போர் விமானங்கள் தனது வான்பரப்பைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான மார்கரிட்டா ரோபல்ஸ், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக வரும் அமெரிக்க விமானங்கள் தங்கள் வான் எல்லையைத் தொட முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் போர் உத்திகளுக்குப் மிகப்பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய ரீதியான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது விமானங்களை இயக்குவதில் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.