தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 17.5.2023 அன்று ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டார்.
அதில், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு 1.4.2023 முதல் அகவிலைப்படி உயர்வினை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டார். அதுமட்டுமல்லாமல், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று அறிவித்தார்.
மேலும், அதை கொள்கை முடிவாகவே வெளியிட்டார். அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்பட்ட உடனேயே, தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 1.7.2025 முதல் அகவிலைப்படியினை 3 சதவீதம் உயர்த்தி, 55 சதவிகிதத்திலிருந்து 58 சதவீதமாக வழங்கியுள்ளது.
இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வானது, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அறிவிக்கப்படும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதுதொடர்பான அறிவிப்பு இதுநாள் வரையில் வெளியிடப்படவில்லை.
எனவே, 1.7.2025 முதல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
