“ஜோதிடர் சொன்ன ஒரு வார்த்தை”.. பெற்ற தாயையே தலையணையால் அமுக்கி கொன்ற மகள்…. நள்ளிரவில் நடந்த கொடூரம்….!

By Nanthini on மாசி 15, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் துமகுருவில், ஜோதிடரின் பேச்சைக் கேட்டுப் பெற்ற தாயையே மகள் ஆத்திரத்தில் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகுருவின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்பவரின் கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, புஷ்பலதா தனது மகள் சுசித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். வறுமை வாட்டிய நிலையில், இதற்குக் காரணம் என்னவென்று அறிய சுசித்ராவும் சுரேஷும் ஒரு ஜோதிடரை அணுகியுள்ளனர்.

அந்த ஜோதிடர், சுசித்ராவின் தந்தை இறந்ததற்குக் காரணம் அவரது தாய் புஷ்பலதா செய்த செய்வினைதான் என்றும், தற்போது சுசித்ராவையும் கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியிருப்பதாகவும் கூறியுள்ளார். மூடநம்பிக்கையால் தூண்டப்பட்ட சுசித்ரா மற்றும் சுரேஷ், புஷ்பலதாவைக் கொல்லத் திட்டமிட்டனர். அதன்படி கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி இரவு, தனது கணவரைத் திட்டமிட்டு வெளியூருக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் புஷ்பலதாவைத் தலையணையால் அழுத்தியும், சரமாரியாகத் தாக்கியும் சுசித்ரா கொலை செய்துள்ளார்.

   

தாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய சுசித்ரா, இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இருப்பினும், புஷ்பலதாவின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, சுசித்ராவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜோதிடரின் வாக்கால் ஏற்பட்ட பயத்தினால் தாயைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுசித்ராவையும் அவரது கணவர் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்.

   

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மூடநம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், சொத்து விவகாரமும் இந்தக் கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த புஷ்பலதா தனது சொத்துக்களை விற்று வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததாகவும், அந்தப் பணத்தை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பெற்ற மகளே கணவருடன் இணைந்து தாயைக் கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.