உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 63 வயதான தொழிலதிபர் வினீத் மினோச்சா, தனது வீட்டின் படுக்கையறையில் 26 கத்திக்குத்துகளுடன் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நள்ளிரவு விருந்துக்குச் சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு திரும்பிய அவரது மருமகள் ஷாலுவும் கணவரும் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது போல நடித்தனர். ஆனால், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முன்னாள் வேலைக்காரர் விஷாலும் அவரது கூட்டாளி ராஜ் கிஷோரும் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், மருமகள் ஷாலுவே ரூ.6 லட்சம் தருவதாகக் கூறி மாமனாரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. ஷாலுவின் ஆடம்பரமான நள்ளிரவு விருந்து பழக்கம், அதிக செலவு செய்யும் போக்கு மற்றும் நடவடிக்கைகளை மாமனார் வீட்டின் சிசிடிவி மூலமாகக் கண்காணித்து கண்டித்ததே இக்கொலைக்குக் காரணமாக அமைந்தது. செலவுக்கு மாமனாரிடம் பணம் கேட்க வேண்டியிருந்ததும், ஜூலை 28 அன்று தாமதமாக வந்ததால் அவர் திட்டியதும் ஷாலுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கு 20 நாட்களுக்கு முன்பே வீட்டின் அசல் சாவியைக் கொடுத்து டூப்ளிகேட் சாவி தயாரிக்க வைத்த ஷாலு, ஜென்மாஷ்டமி நாளன்று குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது வீட்டிற்கு வந்த கொலையாளிகளைத் தடுத்த செக்யூரிட்டியிடம், அவர்கள் மருந்து கொடுக்க வந்திருப்பதாகப் பொய் சொல்லி உள்ளே அனுப்பியுள்ளார். அவர்கள் மாமனாரை 26 முறை குத்திக் கொன்ற பின், ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து நாடகமாடிய ஷாலு மற்றும் கொலையாளிகள் இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
