கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, புதுச்சேரியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அடுத்த செங்கோடு பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற பொறியாளர், துபாயில் பணியாற்றிவிட்டு தற்போது ஊரில் இருந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், தனது மனைவியின் கர்ப்ப காலத்திலேயே புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞருடன் சமூக வலைதளம் மூலம் பழகி வந்துள்ளார்.
தான் திருமணமானவர் என்பதை மறைத்து அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பழகிய அபிஷ், அவரை குமரி மாவட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அங்குள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் நான்கு மாத கர்ப்பமானார். இதற்கிடையில், அபிஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் உண்மை அந்தப் பெண்ணிற்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அபிஷிடம் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், அபிஷ் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அபிஷை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பெண்கள் மீதான இத்தகைய குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
